Tuesday 28 August 2012

அங்கீகாரம் பெறாத 1,022 பள்ளிகளுக்கு 9 மாதம் கெடு:

        இலவச, கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, அனைத்துப் பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகாரம் பெறாத, 1,022 பள்ளிகள், வரும் மே மாதத்திற்குள், தொடர் அங்கீகாரம் பெற, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், சம்பந்தபட்ட
அதிகாரிகளே இதற்குப் பொறுப்பாவர் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.
              மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், 1,022 பள்ளிகள், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, தொடர் அங்கீகாரம் பெறாதது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், இத்தகையப் பள்ளிகளை நேரடியாக ஆய்வு செய்து, தொடர் அங்கீகாரம் பெறுவதற்கான ஆவணங்களைப் பெற, பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும். அடுத்த கல்வியாண்டு துவங்குவதற்குள், இந்தப் பள்ளிகள், அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை, முதன்மைக் கல்வி அலுவலர்கள் எடுக்க வேண்டும். தவறினால், சம்பந்தப்பட்ட ஆய்வு அதிகாரிகளே, அனைத்திற்கும் பொறுப்பேற்க நேரிடும்.
    சிறுபான்மை பள்ளிகளாக இருந்தால், அந்தப் பள்ளி குறித்த ஆவணங்களை, பள்ளிக்கல்வி இணை இயக்குனருக்கு (இடைநிலைக் கல்வி) அனுப்ப வேண்டும். சிறுபான்மை அல்லாத பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகாரம் வழங்குவது குறித்த முடிவை, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே எடுக்கலாம். இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    இதேபோல், தொடக்கக் கல்வித் துறையின் கீழும், 500க்கும் மேற்பட்ட பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளும், அங்கீகாரம் பெற வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது. புதிய விதிமுறைகள் காரணமாக, தொடர் அங்கீகாரம் பெற முடியாத நிலையில், 700க்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளன.
       கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட இந்தப் பள்ளிகள், குறைந்த இடப்பரப்பில் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளை, மூடவும் முடியாத நிலை உள்ளது. எனவே, இந்தப் பள்ளிகளின் பிரச்னை குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில், அரசு தன் முடிவை விரைவில் அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. innoru kumbakonam sambavam nadaiperamal irukka ella palligalaiyum (arasu palligal utpada) thara ayvukku utpaduthuvadhu sirappanathaga irukkum idhil asattai koodadhu.

    ReplyDelete