Monday 27 August 2012

கல்விக்கடன் வழங்குவதில் தமிழகம் முன்னணி!

        கல்விக் கடன் வழங்குவதில், நாட்டிலேயே தமிழகத்தில் உள்ள பொதுத் துறை வங்கிகள் தான், முன்னணியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் மற்ற மாநிலங்களை விட, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா
போன்ற தென் மாநிலங்களில் தான், அதிக அளவில் கல்விக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
வங்கித் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
      ஏழை மாணவர்கள், உயர் கல்வி படிப்பதற்கு, பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக, தகுதியான மாணவர்களுக்கு, பொதுத் துறை வங்கிகள் மூலமாக கடன் வழங்கும் திட்டம், மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
           இந்தாண்டு மார்ச் மாத நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள பொதுத் துறை வங்கிகள் மூலமாக, 49 ஆயிரம் கோடி ரூபாய், கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக, தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களில் உள்ள வங்கிகள் மட்டும், ஒட்டு மொத்த கடனில், 50 சதவீதத்தை வழங்கியுள்ளன. அதிலும், தமிழகத்தில் மட்டும், 11 ஆயிரத்து 625 கோடி ரூபாய், கடன் வழங்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக, கேரளாவில், 6,180 கோடியும், ஆந்திராவில் 5,215 கோடியும், கர்நாடகாவில் 3, 479 கோடியும் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
    இந்த நான்கு மாநிலங்களில் இருந்து மட்டும், 26 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு, கடன் வழங்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு, டாமன் மற்றும் டையூவில், நாட்டிலேயே மிகக் குறைந்த அளவாக, கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
           மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், கடந்த வாரம், ‘கல்விக் கடன் கோரும் மாணவர்களின் விண்ணப்பங்களை, போதிய காரணங்கள் இன்றி, நிராகரிக்கக் கூடாது. தகுந்த காரணங்களுடன், கல்விக் கடனுக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, கடன் பெறுவதற்கான உரிமை உள்ளதுஎனக் கூறியிருந்தார்.
      வங்கிகள் கடன் வழங்கும்போது குறிப்பிட்ட அதிகாரி, மாணவனின் விண்ணப்பத்தை ஏற்காத பட்சத்தில் உயர் அதிகாரி ஒப்புதல் பெற்று வழங்க முன்வரவேண்டும். ஒருவேளை குறிப்பிட்ட காலத்திற்குப் பின், கடனை திரும்ப செலுத்தாவிட்டால், பிரச்னை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு கடன் உதவி பெறும் மாணவர்களுக்கான நடைமுறை வரம்புகள் எல்லாவற்றையும் தெளிவுபடுத்தும் வகையில், புதிய அறிக்கையை வங்கித்துறை வெளியிடும்.

No comments:

Post a Comment