Thursday 27 September 2012

"250 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு விரைவில் கட்டண நிர்ணயம்'



உயர் நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, மீதமுள்ள 250 சி.பி.எஸ்.. பள்ளிகளுக்கும் விரைவில் கட்டண நிர்ணயம் செய்யப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிகக் கட்டண வசூல் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தலைமையிலான குழுக்களிடமும்
பெற்றோர்கள் புகார் தெரிவிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசின் பள்ளிக் கட்டண முறைப்படுத்தும்
சட்டம் சி.பி.எஸ்.., .சி.எஸ்.. பள்ளிகளையும் கட்டுப்படுத்தும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வாரத்தில் தீர்ப்பு வழங்கியது.
தமிழகத்தில் இப்போது 327 சி.பி.எஸ்.. பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 75 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 250-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும் விரைவில் கட்டண நிர்ணயம் செய்யப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்டண நிர்ணயக் குழுக்கள் இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயித்துள்ளன. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.   
பள்ளிக் கட்டண முறைப்படுத்தும் சட்டத்தின்படி, நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு 10,934 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த 6,400 பள்ளிகளுக்கு நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு கட்டணம் நிர்ணயித்தது.
நீதிபதி ரவிராஜ பாண்டியன் குழுவின் தீர்ப்பை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த 380 பள்ளிகளிடம் இப்போது நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு குழு விசாரணை நடத்தி வருகிறது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளிடம் விசாரணை முடிந்துள்ளதாகவும், மீதமுள்ள பள்ளிகளிடம் வரும் நவம்பருக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என்று தெரிகிறது.
மாதத்துக்கு 50 புகார்கள்: தமிழகம் முழுவதும் அதிகக் கட்டண வசூல் தொடர்பாக மாதத்துக்கு சுமார் 50 புகார்கள் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்துக்கு வருகின்றன. இதுதவிர, கட்டண நிர்ணயக் குழுவுக்கும் புகார்கள் வருகின்றன.
இதுவரை 7 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இதுதொடர்பாக அரசு நிதானமாக யோசித்துதான் முடிவு எடுக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
அதிகக் கட்டண வசூல் புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம், பெற்றோர்கள் தரப்பை அழைத்து கட்டண நிர்ணயக் குழு விசாரணை நடத்துகிறது. பல பள்ளிகள் கூடுதலாக வசூலித்த கட்டணத் தொகை பெற்றோர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான குழுக்கள்: அதிகக் கட்டண வசூல் தொடர்பான புகார்களை விசாரிப்பதற்காகஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் கீழ்க்கண்ட உறுப்பினர்களைக் கொண்ட குழு உள்ளது.
1. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் - தலைவர்
2. மாவட்டக் கல்வி அலுவலர் (மாவட்டத் தலைநகர்) - உறுப்பினர்-செயலர்.
3. அந்த மாவட்டத்தில் உள்ள பிற மாவட்டக் கல்வி அலுவலர்கள் - உறுப்பினர்கள்.
4. மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் - உறுப்பினர்.
5. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் - உறுப்பினர்.
6. அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் (மாவட்டத் தலைநகர்) - உறுப்பினர்.
7. அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் (மாவட்டத் தலைநகர்) - உறுப்பினர்.
8. மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதல்வர் - உறுப்பினர்.
9. ஆங்கிலோ-இந்தியன் பள்ளியின் முதல்வர் - உறுப்பினர்.
இந்தக் குழுவுக்கு பெற்றோர்கள் புகார் அளித்தால், அதுதொடர்பாக மாவட்டக் குழு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பள்ளி தொடர்பாக மெட்ரிக் இயக்குநரகத்துக்கு அறிக்கை அனுப்பும். பள்ளி கூடுதல்  கட்டணம் வசூலித்திருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெட்ரிக் இயக்குநரகத்துக்கு புகார் அனுப்புவதற்கு பதில் இந்தக் குழுக்களுக்கு புகார் அனுப்பினால், குழுவினர் சம்பந்தப்பட்ட பள்ளியில் நேரடியாக விசாரணை நடத்துவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அபராதம் விதிக்கும் பிரிவு வேண்டும்: பள்ளிக் கட்டண முறைப்படுத்தும் சட்டத்தில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கும் பிரிவோ அல்லது பள்ளித் தாளாளர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தண்டனையளிக்கும் பிரிவோ சேர்க்கப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
தனியார் பள்ளிகளைச் சோதனையிட்டு, ஆவணங்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரத்தை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால், இப்போதுள்ள சட்டத்தின்படி, அங்கீகாரத்தை மட்டுமே ரத்து செய்ய முடியும் என்பதால், மாணவர்கள் நலன் கருதி நடவடிக்கை எடுப்பது சிரமமாக உள்ளது. சட்டமும் நடவடிக்கை எடுக்க இயலாத வகையில் பலவீனமாக உள்ளது. எனவே, அபராதம் விதிக்கும் பிரிவு, கூடுதல் கட்டணத்தைத் தொடர்ந்து வசூலிக்கும் பள்ளிகளை அரசே எடுத்துக்கொள்ளும் பிரிவு ஆகியவற்றை கட்டண முறைப்படுத்தும் சட்டத்தில் சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்களும், பெற்றோர்களும் வலியுறுத்துகின்றனர்.

No comments:

Post a Comment