Saturday 22 December 2012

கட்டாயக் கல்வி சட்டம், நேரடி தனி தேர்வுக்கு பொருந்தாது!



              இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம், நேரடி தனி தேர்வுக்கு பொருந்தாது" என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த சட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை, எந்த மாணவரையும் தோல்வி அடைய செய்யக்கூடாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம், நேரடி தனி தேர்வுக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது. 8ம் வகுப்பு தேர்வு,
நேரடியாக, தனி தேர்வாக ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. ஓட்டுனர் உரிமம் வேண்டுபவர்கள், ரயில்வே துறையில், "கலாசி" வேலையை எதிர்பார்ப்பவர்கள் மற்றும் அலுவலகங்களில், உதவியாளர் வேலைக்குச் செல்பவர்கள், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களுக்காக, ஆண்டுதோறும், 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் பேர், எட்டாம் வகுப்பு, தனி தேர்வை எழுதுகின்றனர். இதற்கு, வயது வரம்பு இல்லை என்பதால், 30 வயதிற்கு மேற்பட்டவர்கள், அதிகளவில் எழுதுகின்றனர்.

இந்த தேர்வை எழுதுபவர்கள் அனைவரையும், தேர்ச்சி அடையச் செய்வதா அல்லது வழக்கமான முறையில், விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, தேர்வு முடிவை வெளியிட வேண்டுமா என, தெரியாமல், தேர்வுத்துறை தவித்தது. பின், சட்ட வல்லுனர்களிடம், தேர்வுத்துறை அதிகாரிகள் ஆலோசனை பெற்று, அதனடிப்படையில், "இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம், நேரடி தனி தேர்வுக்கு பொருந்தாது" என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
                            
இது குறித்து, தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தில், நேரடி தனி தேர்வர்கள் குறித்து, எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. பள்ளிகளில் பயிலும் மாணவர்களை மட்டுமே, 8ம் வகுப்பு வரை, தோல்வி அடைய செய்யக்கூடாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி தனி தேர்வை, நிர்ணயிக்கப்பட்ட வயதை விட, அதிகமாக உள்ளவர்கள் தான் எழுதுகின்றனர். எனவே, அவர்களுக்கு, இந்த சட்டம் பொருந்தாது என, சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர். அவர்களின் ஆலோசனைப்படி, இந்த முடிவை எடுத்தோம். இவ்வாறு, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய முடிவை, கடந்த ஏப்ரலில் நடந்த, நேரடி எட்டாம் வகுப்பு தனித்தேர்வில், தேர்வுத்துறை அமல்படுத்தியுள்ளது. 8,918 பேர், தேர்வை எழுதியதில், 2,018 பேர் (22.62 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர்.
                               
மொத்த தேர்வர்களில், 194 பேர், 14 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும், மற்ற அனைவரும், கூடுதல் வயதை கொண்டவர்கள் என்றும், தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 194 பேரில், 99 பேர், தேர்ச்சி பெற்றனர் என்றும், தேர்வுத்துறை தெரிவித்தது. இவர்கள் அனைவருக்கும், ஜனவரி முதல் வாரத்திற்குள், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன
.

No comments:

Post a Comment