Wednesday 30 January 2013

10ம் வகுப்பு வினா வங்கி புத்தகம்: மாவட்டங்களில் விற்கப்படுமா?



               பத்தாம் வகுப்பு வினா வங்கி புத்தகம், சென்னை, டி.பி.., வளாகத்தில் உள்ள, மாநில பெற்றோர் - ஆசிரியர் கழக அலுவலகத்தில், விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மாநிலத்தின் கடைகோடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், சென்னைக்கு படை எடுக்க வேண்டிய
நிலை உள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும், மாநில பெற்றோர்- ஆசிரியர் கழகம், பொதுத் தேர்வு எழுதும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்காக, வினா வங்கி புத்தகங்களை தயாரித்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறது. பாடப் புத்தகங்களை தயாரித்த ஆசிரியர் குழுவினரே, வினா வங்கி புத்தகங்களையும் தயாரித்து வழங்குவதால், பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியருக்கு, இந்த புத்தகம், சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது.
                              
பிளஸ் 2 வினா வங்கி புத்தகங்கள், தொடர்ந்து பல மாதங்களாக விற்பனை செய்யப்படுவதால், இந்த புத்தகங்களை வாங்க, அதிகளவில் கூட்டம் இல்லை. ஆனால், 10ம் வகுப்பு வினா வங்கி புத்தகங்கள், சமீபத்தில் அச்சடிக்கப்பட்டு, கடந்த வாரத்தில் இருந்து, விற்பனை துவங்கியுள்ளது. இதை வாங்க, தினமும் ஏராளமான பெற்றோர், நீண்ட வரிசையில் நிற்கின்றனர். இந்த புத்தகங்களை, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விற்பனை செய்ய வேண்டும் என, மாணவர்களும், பெற்றோரும், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மாவட்டங்களில் விற்பனை நடந்தால், முறைகேடு நடப்பதாக கூறி, சென்னையில் மட்டும், விற்பனை செய்து வருகின்றனர்.
                               
இதனால், தென் மாவட்டங்களில் இருந்து, இந்த புத்தகங்களை வாங்குவதற்கு என்றே, பெற்றோர், சென்னைக்கு வருகின்றனர். இதுபோன்ற நிலையை மாற்றி, அனைத்து மாவட்டங்களிலும், வினா வங்கி புத்தகங்களை விற்பனை செய்ய, தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என, பெற்றோரும், மாணவர்களும் எதிர்பார்க்கின்றனர்
.

No comments:

Post a Comment