Sunday 31 March 2013

கலை அறிவியல் கல்லூரிகளில் இலவச கல்வி: சென்னை பல்கலை அறிவிப்பு



             சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள, கலை, அறிவியல் கல்லூரிகளில், இலவசமாக கல்வி கற்க, சென்னை பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து, பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு: சென்னை பல்கலைக்கழகம், மாணவர் இலவச கல்வி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் உள்ள, சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும், ஒவ்வொரு கல்லூரிகளிலும், ஐந்து மாணவர்கள், இத்திட்டத்தில், இலவசமாக கல்வி பெறலாம். முதல் தலைமுறை பட்டப்படிப்பு மாணவர்கள், ஆதரவற்றோர், விவசாய கூலி வேலை செய்யும் பெற்றோரின் குழந்தைகள், கைம்பெண், கணவரால் கைவிடப்பட்ட பெண்ணின் குழந்தைகளுக்கு, முன்னுரிமை வழங்கப்படும்.
                        பெற்றோர் வருமானம், 2 லட்ச ரூபாய்க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை, மாணவர்கள், சென்னை பல்கலைக் கழகத்திலோ, பல்கலை இணைய தளத்திலிருந்தோ, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட உடன், பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை, குறிப்பிட்டுள்ள சான்றுகளுடன், 10 நாள்களுக்குள், பல்கலைக் கழக பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில் தேர்ந்து எடுக்கப்படும் மாணவர்கள், அந்தந்த பகுதியில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்க, வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment