Saturday 30 March 2013

கல்லூரிகளை உடனே திறக்க மாணவர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்



                      "மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கல்லூரிகளை உடனடியாக திறக்க வேண்டும்" என, மாணவர்கள் கூட்டமைப்பினர், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு
ஒருங்கிணைப்பாளர் பாரிமைந்தன் கூறியதாவது: போராட்டங்களால், மாணவர்களின் படிப்பு, ஒரு சதவீதம் கூட, பாதிக்க கூடாது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அமைதியான முறையில், எங்களின் போராட்டத்தை தொடருவோம். கடந்த 1976ம் ஆண்டு, மே 14ம் தேதி, செல்வா தலைமையில், தனி ஈழம் அமைய வேண்டும் என, வலியுறுத்தி, வட்டு கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்லூரி தேர்வுகள் முடிந்த பின், அந்த சிறப்புமிக்க நாளிலிருந்து, எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.
                      தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜோ பிட்டோ: கல்லூரிகளை திறக்க வேண்டும் என்பதே, ஒட்டுமொத்த மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது. கடந்த, 20 நாட்களாக மாணவர்கள் அறவழியில் போராடி வருகின்றனர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்டசபையில், இலங்கைக்கு எதிராக, சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது போன்று பார்லிமென்டிலும், தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். எங்களின் அறவழி போராட்டம் படிப்புக்கும், பொதுமக்களும் பங்கம் விளைவிக்காத வகையில், நூதன முறையில் தொடரும்.
                                தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் இளையராஜா: கல்லூரிகளை அரசு முடக்க கூடாது; எங்களின் போராட்டத்தால், மாணவர்களின் படிப்பும், தேர்வுகளும் பாதிக்காது. மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், போராட்டங்களை தொடருவோம். ஈழ தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கணேசன்: மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு உடனே கல்லூரிகளை திறக்க வேண்டும். எங்கள் போராட்டம் மாணவர்களை பாதிக்காது. இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment