Wednesday 24 April 2013

அரசு கல்லூரிகளில் அம்மா உணவகம்: மாணவர்கள் எதிர்பார்ப்பு



                ஏழை மாணவர்கள் அதிகம் படிக்கும் அரசு கல்லூரிகளில், அம்மா உணவகம், திறக்கப்பட வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், 62 அரசு கல்லூரிகள் உள்ளன. இவற்றில்ஏழை மாணவர்களே, அதிகம் படிக்கின்றனர். உயர் கல்வி பெறும்
மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், சுழற்சி முறை திட்டத்தை, அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், காலை, மாலை என இரு வேளைகளிலும், வகுப்புகள் நடத்தப்படுகின்றன. காலை வகுப்புகளில், 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும், மாலை வகுப்புகளில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் படிக்கின்றனர். காலை வகுப்புகள், 8:30 மணிக்கு துவங்குவதால், 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்லூரிகளுக்கு சாப்பிடாமலேயே வருகின்றனர்.
                             
விடுதிகளில் தங்க இடம் கிடைக்காத, திருத்தணி, திருவள்ளுர் உள்ளிட்ட தொலைதூரத்தில் இருந்து சென்னை வரும் மாணவர்கள், அதிகாலை, 5:00 மணிக்கே, வீடுகளிலிருந்து கிளம்ப வேண்டியுள்ளதால், காலை உணவு சாப்பிட முடிவதில்லை. இதனால், எந்த திராணியும் இன்றியே, வகுப்புகளை கவனிக்க வேண்டியுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு, உணவு இடைவேளை என்பதே இல்லை. கிடைக்கும் நேரங்களிலும், தனியார் உணவகங்களை நாட வேண்டியுள்ளது. இங்கு சாப்பாடு, 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுவதால், ஏழை மாணவர்களுக்கு, எட்டாக்கனியாக உள்ளது. ஏழை மாணவர்கள் அதிகளவில் படிக்கும் அரசு கல்லூரிகளில், மலிவு உணவகத்தை அரசு திறக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
.

No comments:

Post a Comment