Monday 29 April 2013

பயின்றதை பயிற்சி செய்வதன் மூலம் மட்டுமே இலக்கை அடைய முடியும்



            இந்தியாவின் கல்வி முறை ஒரு தனி நபரின் ஆளுமைத் தன்மையை மேம்படுத்துவதற்கென்று எந்தவித பிரத்யேக முயற்சியையும் செய்யும் விதத்தில் வடிவமைக்கப்படவில்லை. எனவே, மென்திறன்கள் குறித்த
விழிப்புணர்வை பெறுவதுதான் நிறுவனத்தில் அடுத்த நிலைகளை எட்டுவதற்கு உதவும் என்பது வல்லுனர்களின் கருத்தாகும். மென்திறன் பயிற்சிகள் இது குறித்த புரிதலை ஓரளவு ஏற்படுத்த உதவும் என்பதால் முறையான பயிற்சி நிறுவனங்களின் மூலமாக அவற்றை மேற்கொள்வது நமது பணி எதிர்காலத்திற்கான உத்திரவாதத்தை தர முடியும். ஆனால் பயின்றதை பயிற்சி செய்வதன் மூலம் மட்டுமே நமது இலக்கை அடைய முடியும் என்பதை மறந்து விடக்கூடாது.
உங்களுக்கு நீங்களே பயிற்சியாளராக மாறுங்கள்!
                       
நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் திறன்களை வளர்ப்பதற்கு என்று பல லட்சம் ரூபாய்களை மூலதனமாக இடுகின்றன. பயிற்சி, திறன் மேம்பாடு என்று பல்வேறு முயற்சிகளை இந்த நிறுவனங்கள் மேற்கொண்ட போதும் தனி நபரின் புரிதல் மட்டுமே நிறுவனம் மற்றும் ஊழியரின் எதிர்கால வளர்ச்சிக்கு முழுமையாக உதவ முடியும். எனவே தனி நபராக ஒருவர் வளர்த்துக் கொள்ள வேண்டியவற்றை இங்கே தருகிறோம் :
குழுவின் அங்கமாக மாறுங்கள்
                             
நாம் ஒரு சர்ச்சின் பாடல் குழுவின் ஒரு பகுதியாக இருந்தாலும் சரி, ஒரு என்.ஜி.., அமைப்பில் இருந்தாலும் சரி, பெரிய நிறுவனத்தில் பணி புரிந்தாலும் சரி  நாம் இணைந்திருக்கும் குழுவின் அங்கமாக மாறுவது முதல் தேவையாகும். இந்தக் குழுவின் தன்மைகளை முழுமையாக ஒத்திருக்கிறோமா என்ற சுய பரிசீலனையை மேற்கொள்ள வேண்டும்.
உங்கள் குணங்களை பட்டியலிடுங்கள்
                              
உங்களை நன்றாகத் தெரிந்த நான்கு அல்லது ஐந்து பேரிடம் உங்களின் சிறந்த மற்றும் மோசமான குணாதிசயங்களை பாரபட்சமின்றி பட்டியலிடச் சொல்லுங்கள். அவர்கள் உங்கள் குடும்பத்தினராகவோ அல்லது உங்கள் நெருங்கிய நண்பராகவோ இருக்கலாம். இந்தப் பட்டியலில் ஒத்திருக்கும் விஷயங்களில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். முக்கியமாக உங்கள் எதிர்மறை குணாதிசயம் என்ற கோணத்தில் ஒத்துப் போகும் அம்சங்கள்தான் உங்கள் குறைபாடுகள் என்பதால் அவற்றைக் களைவதில் கவனம் செலுத்துங்கள்.
உங்கள் நேரத்தை நீங்கள் எப்படி நிர்வகிக்கிறீர்கள் என்பதை அறியுங்கள்
                        
ஒரு நாளில் நீங்கள் எவ்வளவு சாதிக்கிறீர்கள் என்று யோசியுங்கள். உங்களின் நாள் அதிகபட்ச செயல்களுடன் தட்டித் தடுமாறுகின்றனவா அல்லது நீங்கள் சாதிப்பதற்கு போதுமான கால அவகாசம் உள்ளதா என்று பாருங்கள். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் பணி புரிவதற்கு நேர மேலாண்மை என்பது முக்கியத் தேவையாகும்.
பரிசீலனைகளை எப்படி ஏற்கிறோம்?
                        
நிறுவனங்களில் ஒரு முயற்சியின் போது நமது செயல்களுக்கு வரும் கருத்துகளை நாம் ஏற்றுக் கொள்கிறோமா அல்லது முடங்கிவிடுகிறோமா என்று பாருங்கள். அதே போல் நம்மைப் பற்றிய விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறோமா என்று யோசியுங்கள்.
விமர்சிப்பதில் நீங்கள் எப்படி?
                           
எப்படி நம்மைப் பற்றிய விமர்சனங்களை எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் போன்றே நாம் மற்றவர்களை எப்படி விமர்சிக்கிறோம் என்பதும் முக்கியம்தான். நாம் கடுமையாக விமர்சிக்கிறோமா, எதிர்மறையாக விமர்சிக்கிறோமா, நல்ல முறையில் விமர்சிக்கிறோமா அல்லது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறோமா என்ற பரிசீலனையில் ஈடுபடுங்கள்.
விழிப்புடன் வாழுங்கள்
                                   
ஒரு நிறுவனம் என்பது மனிதர்களால் நிறைந்தது. எனவே இந்த மனிதர்களிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் மற்றும் உங்களை எப்படி இவர்களிடம் காட்டிக் கொள்கிறீர்கள் என்பது குறித்ததுதான் மென்திறன்கள். இவற்றைப் பற்றி எழுதுவதோ, சொல்வதோ எளிதான ஒன்று என்ற போதும் மென்திறன் குறித்த விழிப்புணர்வுதான் அவற்றை மேம்படுத்த உதவும் என்பதை மனதில் வையுங்கள்
.

No comments:

Post a Comment