Sunday 28 April 2013

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துங்கள்: ஆசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்



         அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம்
பெருந்துறை தொகுதிக்குள்பட்ட கீழேரிப்பாளையம் மற்றும் கடப்பமடை ஆகிய பகுதிகளில் பள்ளி புதிய கட்டடங்களை திறந்துவைத்து அவர் பேசியதாவது: அரசுப் பள்ளியில் பயிலும் குழந்தைகள் அனைவரும் ஏழை வீட்டு குழந்தைகள் என்ற காரணத்தினால் அவர்களின் கல்விக்கான செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. அரசின் சார்பில் 4 செட் விலையில்லா சீருடை, புத்தகம், வண்ணப் பென்சில்கள், புத்தகப் பை, ஜாமென்ட்ரி பாக்ஸ், காலணிகள், விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.கோடீஸ்வரன் கையில் இருந்த மடிக்கணினி தற்போது அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவனின் கையிலும் தவழுவதற்கு வழிவகை செய்தவர் முதல்வர் ஜெயலலிதா.கல்வியில் இடை நிற்றலை தவிர்க்கும் வகையில் அரசின் சார்பில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் 13 வகையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பை கண்காணிக்க வேண்டும். பள்ளிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசே செய்து தருகிறது. அரசுப்பள்ளிகளில் 21,000 புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ.17,000 கோடி அரசு நிதி ஒதுக்கியுள்ளது. தனியார் பள்ளிக்கு இணையான கட்டடமைப்புகள், தரமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் மாணவர் சேர்க்கையையும், தேர்ச்சி விகிதத்தையும் அதிகரிக்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து நிறைய கனவுகளுடன் இருப்பார்கள். மாணவ, மாணவியர்கள் பெற்றோர்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்றார். பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கீழேரிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டடத்தையும், கடப்பமடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 2 வகுப்பறைகளையும் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் திறந்துவைத்தார்.இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.கணேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் .ஸ்ரீதேவி, தொகுதி செயலர் திங்களூர் எஸ்.கந்தசாமி, பெருந்துறை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் எஸ்.பெரியசாமி, துணைத் தலைவர் விஜயன் () ராமசாமி, பெருந்துறை பேரூராட்சி தலைவர் சரஸ்வதி துரைராஜ், பெருந்துறை வட்டாட்சியர் ஜான்சிராணி உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment