Wednesday 15 May 2013

10ம் வகுப்பு பாட புத்தகம்: இந்திய வரைபடத்தில் இல்லை அருணாச்சல்



             மகாராஷ்டிரா மாநில, 10ம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ள, இந்திய வரைபடத்தில், அருணாச்சல பிரதேசம் இடம் பெறவில்லை. அதுமட்டுமின்றி,
அம்மாநிலம், சீனாவுக்கு சொந்தமானதாக காட்டப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில கல்வி வாரியத்தின் சார்பில் அச்சிடப்பட்டுள்ள, 10ம் வகுப்பு புவியியல் பாட புத்தகத்தில், உலக நாடுகள் மற்றும் இந்தியாவின் வரைபடங்கள் இடம் பெற்றுள்ளன. புத்தகத்தில், அச்சிடப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில், நாட்டின் வடகிழக்கு மாநிலமான, அருணாச்சல பிரதேசம் இடம் பெறவில்லை.அதற்கு மாறாக, உலக வரைபடத்தில், அருணாச்சல பிரதேசம், சீன எல்லைக்குள் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது.
                            
ஏற்கனவே, "அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது" என, சீனா கூறி வரும் நிலையில், இந்த வரைபடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி மாநில கல்வித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களோ, புத்தகங்களை அச்சிட்ட நிறுவனத்தின் மீது, பழியை போட்டு, தப்பித்துக் கொண்டனர். இதற்கிடையே, புத்தகங்களை அச்சிட்ட, அரசு அச்சகமான, பாலபாரதி, தன் தவறை ஒப்புக் கொண்டது. எனினும், 17 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு விட்டதால், இதில் மாற்றம் செய்ய முடியாது என்றும், இந்த புத்தகங்களே மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு, புத்தகங்களை அச்சிடும் போது, பிழையை திருத்திக் கொள்வதாகவும் கூறியுள்ளது.
                            
மாநில கல்வித் துறை மற்றும் அச்சகத்தின் பொறுப்பற்ற இந்த செயல்பாடு, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், செய்த தவறை அடுத்த ஆண்டு திருத்திக் கொள்வதாக கூறியுள்ளதால், இந்த ஆண்டு, 17 லட்சம் மாணவர்கள், அருணாச்சல பிரதேசம், சீனாவுடையது என்றே கல்வி கற்க உள்ளனர்
.

No comments:

Post a Comment