Tuesday 28 May 2013

ஐஆர்சிடிசி இணையதளத்தில் நிமிடத்துக்கு டிக்கெட் புக்கிங் 2000லிருந்து 7,200ஆக உயர்த்த முடிவு


              ரயில்வேயின் துணை நிறுவனமான இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி), இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஒரு நிமிடத்தில்
2,000 டிக்கெட்டுகளை மட்டுமே இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படும். ஆனால், நாளுக்குள் நாள் ரயில்களில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகி க் கொண்டிருக்கும் நிலையில், நிமிடத்துக்கு 2,000 டிக்கெட் என்ற வேகம் போதுமானதாக இல்லை. இதனால் பலருக்கு டிக்கெட் கிடைக்காத சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும், ரயில் நிலையங்களில் தேவையில்லாமல் கூட்டம் சேர்க்கிறது. கடந்த 2012ம் ஆண்டில் நாளொன்றுக்கு 3.67 லட்சம் டிக்கெட்டுகள் சராசரியாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 4.15 லட்சமாக உயர்ந்துவிட்டது. ஒரு ஆண்டுக்கு சராசரியாக 31 கோடி டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இதில், 55 சதவீதம் டிக்கெட்டுகள் ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. 37 சதவீதம் டிக்கெட்டுகள் இணையதளம் வழியாக பெறப்படுகிறது. மீதமுள்ள 8 சதவீதம் டிக்கெட்டுகள் ஏஜன்ட்கள் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது.
                              
இப்படிப்பட்ட நிலை யில், ஐஆர்சிடிசி இணையதளத்தின் வேகம் போதுமானதாக இல்லை. இதை மாற்றி, நிமிடத்துக்கு 7,200 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வகையில், ஐஆர்சிடிசி இணையதளத்தின் வேகம் அதிகரிக்கப்படும் என்றும், இதற்காக அதிநவீன சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்படும் என்றும் கடந்த ரயில்வே பட்ஜெட்டில் அப்போதைய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் அறிவித்தார். இதற்கான திட்டம் குறித்து, இப்போதைய ரயில்வே அமைச்சர் சி.பி.ஜோஷியிடம் நேற்று ரயில்வே அதிகாரிகள் விளக்கினர். வீடியோ காட்சிகள் மூலம் விளக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், ஐஆர்சிடிசி நிர்வாக இயக்குநர் ஆர்.கே.டாண்டன், ரயில்வே போர்டு தலைவர் வினய் மிட்டல், சிஆர்ஐஎஸ் நிர்வாக இயக்குநர் சுனில் குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஐஆர்சிடிசி இணையதளத்தின் வேகத்தை அதிகரிக்கும் வகையில், நவீன சாப்ட்வேர், சர்வர் உள்ளிட்டவை அமைப்பது தொடர்பாக ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்தபடி டெண்டரை வெளியிடும் பணி நடந்து வருகிறது. நடப்பு நிதியாண்டுக்குள் இது நடைமுறைக்கு வந்துவிடும்’’ என்றார்.


No comments:

Post a Comment