Wednesday 15 May 2013

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் முதல்முதலாக வழிகாட்டுதல் நிகழ்ச்சி



            தமிழக முதல்வர் கல்வித்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மேல் படிப்பு என்ன படிக்கலாம் என்பது குறித்து அவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி
நடத்த வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து கல்வி அமைச்சர் அறிவுரையின் பேரில் கல்வித் துறை செயலாளர், இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களில் வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை முதல் முதலாக துறை சார்பில் நடத்த உத்தரவிட்டுள்ளனர். தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நான்கு இடங்களில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செயக்கண்ணு கூறியிருப்பதாவது:
                              
அரசு உத்தரவுப்படி பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று அடுத்ததாக என்ன படிக்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் முதல், முதலாக அனைவருக்கும் பயனுள்ள வகையில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 22ம் தேதி திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 23ம் தேதி கோவில்பட்டி ..சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 24ம் தேதி நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப் பள்ளியிலும், 25ம் தேதி ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ் மேல்நிலைப்பள்ளியிலும் மேல் படிப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சிறந்த கல்வியாளர்கள், மருத்துவர்கள், பொறி யாளர்கள், வல்லுநர்கள் மாணவ, மாணவிகளுக்கு என்ன படிக்கலாம் என்பது குறித்து முழு விபரங்களுடன் முக்கியத்துவமான ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
                    
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களது பகுதிக்கு உட்பட்ட மையங்களில் சென்று பயன்பெற வேண்டும். இவ்வாறு சி.. செயக்கண்ணு தெரிவித்தார். ராமநாதபுரம்: முதன்மை கல்வி அலுவலர் சிவகாம சுந்தரி கூறியதாவது: பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் உயர் கல்வியில் என்ன படிக்கலாம் என ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. ராமநாதபுரத்தில், மே 16ம் தேதி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணி, ஏர்வாடியில் தர்கா ரோடு அரபிக் கல்லூரியில் காலை 8.30 மணி, பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணிக்கு நிகழ்ச்சிகள் நடக்கின்றன, என்றார்.
                         
தேனி: பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, மாவட்டத்தில் ஏழு இடங்களில் கல்வித் துறை சார்பில், உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. தேனி மாவட்டத்தில், 13 ஆயிரத்து 365 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 12 ஆயிரத்து 600 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகளில் படித்து, பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடத்த, அரசு உத்தரவிட்டுள்ளது. நாளைகாலை 10 மணிக்கு இந்த வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பிளஸ் 2 தேர்வுக்கு பின், கல்லூரிகளில் சேர விருப்பமுள்ள மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் பாடங்கள், படிப்புகள், கல்லூரிகள் குறித்து வழிகாட்டப்படும்.
                               
மாவட்டத்தில், இந்த வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள்: பெரியகுளம், வி.வி., அரசு ஆண்கள் பள்ளி, தேனியில் நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, போடி .கா.நி.,மேல்நிலைப்பள்ளி, கம்பத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உத்தம பாளையத்தில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மயிலாடும்பாறையில் ஜி.ஆர்.வி., மேல்நிலைப்பள்ளி ஆகிய ஏழு இடங்களில் நடக்கிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம், என முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி தெரிவித்துள்ளார்
.

No comments:

Post a Comment