Thursday 30 May 2013

விடைத்தாள் திருத்தும் பணி; 700 ஆசிரியர்கள் புறக்கணிப்பு



             சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லூரி மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக, கொண்டு வரப்பட்ட புதிய நடைமுறைக்கு, 700 ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, திருத்தப்பட
வேண்டிய விடைத்தாள்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் முடிவை, சென்னை பல்கலைக்கழகம் வாபஸ் பெற்றது. சென்னை பல்கலைக் கழக கட்டுப்பாட்டில், 110க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில், இளங்கலை, முதுகலையில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி கடந்த, 27ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு ஆசிரியரும், காலையில், 20 தாள்கள், பிற்பகலில், 20 தாள்கள் என, நாளொன்றுக்கு, 40 விடைத்தாள்களை திருத்த வேண்டும்.
                             
இந்நிலையில், நாளொன்றுக்கு, திருத்தப்பட வேண்டிய விடைத்தாள்களின் எண்ணிக்கையை, இளங்கலை வகுப்புகளுக்கு, 40ல் இருந்து, 50 ஆகவும், முதுகலை வகுப்புகளுக்கு, 30ல் இருந்து, 40 ஆகவும் உயர்த்தி, உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டது. விடைத்தாள் திருத்தும் எண்ணிக்கை உயர்த்தியதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பணி தரம் குறைய வாய்ப்புள்ளதாகவும் ஆசிரியர்கள் கூறினர். விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட சென்னை எத்திராஜ் கல்லூரி மையம், தியாகராய நகர் மைய ஆசிரியர்கள், 700க்கும் மேற்பட்டோர், விடைத்தாள் திருத்தும் பணிகளை, நேற்று புறக்கணித்தனர். 40 விடைத்தாளாக மாற்றும் வரை, போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்தனர்.
                         
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத வேதியியல் பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: பார்த்து படித்து, சரியாக திருத்த வேண்டும் என்றால், 40 விடைத்தாள்களை மட்டுமே, ஒரு நாளில் திருத்த முடியும். அதற்கு மேல் விடைத்தாள்களை திருத்தும் போது, ஆசிரியர்களின் பணிதிறன் பாதிக்கப்படும். இதனால், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். தற்போது, விடைத்தாள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளதால், காலையில், ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே வந்தும், மதியம் கூடுதலாக, ஒரு மணி நேரம் இருந்தும் விடைத்தாள்களை திருத்த வேண்டியுள்ளது.
                         
ஒருநாள் அகவிலைப்படியாக, ஆசிரியர்களுக்கு, 120 ரூபாய் வழங்கப்படுகிறது. தினமும், 10 விடைத்தாள் என, நான்கு நாட்கள், 40 விடைத்தாள்களை ஒரு ஆசிரியர் கூடுதலாக திருத்துவதால், ஒரு நாள் ஆசிரியர் சம்பளம் மிச்சமாகிறது. பணம் சேமிக்கும் பணிகளை, கல்வியில் மேற்கொள்ள கூடாது. இதனால், கல்வி தரம் பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன் கூறுகையில், "விடைதாள் திருத்தும் எண்ணிக்கை அதிகரிப்பு, ஆசிரியர்களின் வேலை பளுவை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே இருந்த நடைமுறைபடி, நாளொன்றுக்கு, 40 விடைத்தாளை ஆசிரியர்கள் திருத்தினால் போதுமானது என முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார். துணைவேந்தர் அறிவிப்பையடுத்து, இன்றிலிருந்து ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது
.

No comments:

Post a Comment