Saturday 25 May 2013

உயர்நிலை தலைமையாசிரியர் கலந்தாய்வு: கோர்ட் தடையால் நிறுத்தம்



              உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில், தமிழ், தெலுங்கு ஆசிரியர்கள் பாதிக்கும்படியான குளறுபடியான உத்தரவால், கோர்ட் தடை விதித்தது; இதையடுத்து, கலந்தாய்வு நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், பொது மாறுதல் கலந்தாய்வு நடந்து வருகிறது. "உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு, 2001 டிச., 31ல், முதல் நிலை மொழியாசிரியர்கள், பணி நியமனம் பெற்றவர்கள், பி.எட்., பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்" என தெரிவிக்கப்பட்டது. மற்ற பாட ஆசிரியர்களுக்கு, 2013, ஜன., 1 வரையிலான பதவி மூப்பு, கருத்தில் கொள்ளப்பட்டது. தமிழ் மொழியில், பி.லிட்., பட்டம் பெற்றவர்கள், நேரடியாக தமிழாசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள், பி.எட்., பட்டம் பெறாததால், தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற முடியாது.
                         கடந்த, 2001டிச., 31க்கு முன், பி.எட்., பட்டம் பெற்று, பணி நியமனம் செய்யப்பட்ட தமிழ் ஆசிரியர்கள் மட்டுமே, தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. இதில் தமிழ், தெலுங்கு மொழி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரியை சேர்ந்த தெலுங்கு ஆசிரியர் சந்திரசேகர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதை தொடர்ந்து, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு, இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் பிற்பகல் நடக்கயிருந்த, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது. விருதுநகர் முதன்மை கல்வி அதிகாரி (பொறுப்பு) அமுதவள்ளி கூறுகையில், "உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த, கோர்ட் தடை உத்தரவு வழங்கியதால், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

No comments:

Post a Comment