Thursday 2 May 2013

தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் அரசுப் பள்ளிகளில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வம்



                  தமிழகத்தில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், அரசுப் பள்ளிகளில் சேர மாணவ-மாணவிகள் இடையே
ஆர்வம் அதிகரித்துள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அரசு, பள்ளிக் கல்வித்துறையை மேம்படுத்த பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி நியமனம், பள்ளிக் கல்வித் துறைக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா புத்தகப் பை, சீருடை மற்றும் கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப் பெட்டி, வண்ணப் பென்சில்கள், புவியியல் வரைபடங்கள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
                                           
கல்வி மட்டுமின்றி, மாணவர்களிடையே விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு சதுரங்கம், கைப்பந்து, கேரம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொடர் நடவடிக்கைகளால் அரசுப் பள்ளிகளில் சேர மாணவ-மாணவியர்கள் பெரும் ஆர்வம்காட்டி வருகின்றனர். அரசின் இந்த நடவடிக்கை, அனைத்து மாணவ-மாணவிகளும் சிறந்த கல்வி அறிவு பெறுவதோடு, ஆங்கில அறிவும் பெற வழிவகை செய்யும் என பள்ளித் தாளாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதற்கு, இப்பிரிவினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
                                       
இதுதவிர, முப்பருவத் தேர்வு முறை மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், பாடச்சுமையும் குறைந்து அதிக மதிப்பெண் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மாணவ-மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி, சாதிச்சான்றிதழ்களை பள்ளியிலேயே வழங்கும் நடைமுறை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுக்கு மாணவர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழக கல்வித்துறையில் நிகழ்த்தப்பட்டுவரும் முன்னேற்றப் பாதையிலான மாற்றங்கள் மற்றும் அளிக்கப்பட்டு வரும் சலுகைகளுக்கு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளதுடன், முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதாவுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற மகாகவி பாரதியின் வாக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சீர்மிகு நடவடிக்கைகளால் மெய்யாகி வருகிறது என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை
.

No comments:

Post a Comment