Tuesday 21 May 2013

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள்: கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம்



            தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் 6ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வியைத் துவங்க, மாவட்டங்களிலுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம்
வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் டி.தேவராஜன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடைபெறுகிறது. முந்தைய ஆண்டு வரை இந்த கலந்தாய்வுக்கு தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு வந்து செல்ல வேண்டியிருந்தது. அவர்களின் அலைச்சலைக் குறைக்கும் வகையிலும், வெளிப்படைத் தன்மையுடனும் இந்த நடைமுறையை அரசு கொண்டுவந்துள்ளது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க 20,203 தலைமை ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர்.
                           இவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் முன்னிலையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. முதன்முறையாக மாவட்டங்களில் நடைபெறுவதால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பள்ளிக் கல்வித் துறையில் உயர் அலுவலர்களில் ஒருவரை பார்வையாளராக அனுப்பி வைத்துள்ளோம். அந்த அடிப்படையில் நான் (இயக்குநர்) மதுரையில் நடைபெற்ற கலந்தாய்வை ஆய்வு செய்தேன். இன்னும் பல தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பிருக்கிறது. ஆங்கில வழி வகுப்புகள்: அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி துவங்க வேண்டும் என பெரும்பாலான பெற்றோர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதைப் பரிசீலித்த அரசு, இந்த ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளைத் துவக்க உத்தரவிட்டுள்ளது. அந்தந்த மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில், எந்தெந்தப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி வகுப்பு துவக்க பெற்றோர்கள் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்படுகிறதோ, அந்தப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கும் வகையில் ஒரு வகுப்பு துவக்கப்படும். அதேசமயம், அந்தப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பில் தமிழ் வழிக் கல்வி வகுப்பும் தொடர்ந்து இருக்கும். ஆங்கில வழிக் கல்வி பாடங்களை நடத்துவதற்கு போதுமான தகுதியான ஆசிரியர்கள் பெரும்பாலான பள்ளிகளில் ஏற்கெனவே பணியில் இருக்கின்றனர். ஏதாவது சில பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி போதிக்க ஆசிரியர்கள் தேவைப்பட்டால், அதற்கான ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித் துறை தயாராக இருக்கிறது. மேலும், விரைவில் டிஆர்பி மூலம் புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
                              மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம்: ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளைத் துவக்க பள்ளிக் கல்வித் துறைக்கு அனைத்து மாவட்டங்களிலிருந்தும் விண்ணப்பித்து, பரிசீலித்து முடிவு எடுப்பதில் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்கும் வகையில், அந்தந்த மாவட்டங்களிலுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களே எந்தெந்தப் பள்ளிகளுக்கு ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தேவையோ, அதற்குரிய அனுமதியைப் பரிசீலித்து வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் விவரத்தை கல்வி அதிகாரிகள் பள்ளிக் கல்வித் துறைக்குத் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முதல்முறையாக ஆன்-லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்ய வசதியாக, பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம், பிளஸ் 2 உடனடித் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பதில் எவ்விதப் பிரச்னையும் இருக்காது.
                     கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களின் 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை சான்றளிப்புக்கு பள்ளித் தேர்வுத் துறையில் ஏற்படும் கால தாமதத்தைத் தவிர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார். பேட்டியின்போது, முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி உடன் இருந்தார்.

No comments:

Post a Comment