Tuesday 7 May 2013

கல்வியை அள்ளி வழங்கும் வள்ளல்களாக ஆசிரியர்கள் விளங்க வேண்டும்


                       "பெருமை வாய்ந்த கல்வியை, அள்ளி வழங்கும் வள்ளல்களாக ஆசிரியர்கள் விளங்க வேண்டும்," என, திண்டுக்கல் காந்திகிராம் பல்கலை கல்வியியல் துறை தலைவர் ஜகீதாபேகம் பேசினார். அருள்புரம் ஜெயந்தி
கல்வியியல் கல்லூரியில், நான்காவது பட்டமளிப்பு விழாவில் பி.எட்., மாணவர்கள் 180 பேருக்கு பட்டங்களை வழங்கி, காந்திகிராம் பல்கலை கல்வியியல் துறை தலைவர் ஜகீதா பேகம் பேசியதாவது: கல்விதான் செல்வம், கற்பகத்தரு, நாட்டின் வளர்ச்சி, ஆக்கம் தரும் அறிவு, நெறிகாட்டும் சொர்க்கம். தானும் கற்று பிறருக்கும் கற்றுத் தருபவர், சிறந்த மனிதர். கல்லாதவனின் வணக்கத்தை விட, கற்றவனின் உறக்கமே மேலானது என்கிறது குரான்.
                              
பெருமைவாய்ந்த கல்வியை செல்வந்தர்களுக்கு மட்டுமல்ல, ஏழைகளுக்கும், சமுதாயத்தில் பின் தங்கியுள்ள கிராமப்புற மாணவர்களுக்கும், இல்லை என கூறாமல் அள்ளி வழங்கும் வள்ளல்களாக, ஆசிரியர்கள் விளங்க வேண்டும். மருத்துவர், பொறியாளர், சட்ட வல்லுனர், வங்கி அதிகாரிகள் என அனைத்து துறை வல்லுனர்களை உருவாக்கும் சர்வ வல்லமை பெற்ற பணி, ஆசிரியர் பணி. இப்பணியை சிலர் விரும்பியும், சிலர் சற்று விருப்பம் இல்லாமலும், சிலர் சூழ்நிலையாலும், சிலர் பொருளாதார நிலையாலும் தேர்ந்தெடுத்தாலும், அனைத்து பணிகளுக்கும் ஆணிவேராய் விளங்குவது ஆசிரியர் பணி என்ற அறப்பணி.
                    
ஆசிரியர் பணியை, ஜனாதிபதி பதவியை விட மிக உயர்வாக கருதியவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். விருப்பு, வெறுப்பற்றவன் இறைவன் மட்டுமல்ல, ஆசிரியரும் தான். ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அதன் பொருளாதாரத்திலோ, உயரமான கோட்டைகளிலோ, கட்டடங்களிலோ இல்லை; கல்வியில் சிறந்து முழு மனிதனாக விளங்கும் குடிமக்களின் எண்ணிக்கையை சார்ந்தது, என்றார்.


No comments:

Post a Comment