Monday 6 May 2013

ஆதார் அட்டை: வட்டாட்சியர் அலுவலகங்களில் தனிப்பிரிவு



                                 தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஆதார் அட்டைகள் வழங்குவதற்கான தனிப் பிரிவுகள் அக்டோபரில் தொடங்கப்படும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கை விரல் ரேகை, விழித்திரை பதிவு, முகவரி, பிறந்த தேதி
உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆதார் அட்டைகளை வழங்க மத்திய அரசு நாடு முழுவதும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆதார் அட்டைகளுக்கு பயோ மெட்ரிக் முறையில் புகைப்படம், கை ரேகை உள்ளிட்ட தகவல்களைச் சேகரிக்க முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் ஆதார் அட்டை குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாததாலும், யாரை அணுகுவது போன்ற தகவல் தெரியாததாலும் பொது மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
                                இது குறித்து மக்கள்தொகை கணக்கெடுப்பு இணை இயக்குநர் (தமிழ்நாடு) கிருஷ்ணா ராவ் கூறியது: இப்போது ஆதார் அட்டைகள் வழங்கும் பணிகள் பெங்களூர் பெல் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் கீழ் பல்வேறு சிறிய நிறுவனங்கள் ஆதார் அட்டைக்கான தகவல்களைச் சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் சேகரிக்கும் தகவல்கள் யு..டி... (யுனிக் ஐடன்டடி  அத்தாரிட்டி ஆஃப் இந்தியா) நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு பின்னர் ஆதார் எண் வழங்கப்படுகிறது.இப்போது தமிழகம் முழுவதும் தகவல்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் முதல்கட்ட தகவல் சேகரிப்புப் பணிகள் முடிந்துள்ளன. இதில் 70 சதவீதம் பேரிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
                                  முதல்கட்ட தகவல்கள் சேகரிக்கும் முகாம்களில் பங்கு பெறாதவர்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட முகாம்களில் கலந்து கொள்ளலாம். முகவரி மாறியவர்களும் இவற்றில் கலந்து கொள்ளலாம். கை ரேகை மற்றும் விழித்திரை சரியாக பதிவு செய்யப்படவில்லையென்றாலும் 2-ஆம் மற்றும் 3-ஆம் கட்ட முகாம்களில் கலந்து கொள்ளலாம்.சேகரிக்கப்படும் தகவல்கள் யு..டி... நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு பின்னர் ஆதார் எண் வழங்கப்படுகிறது. இதுவரை யாருக்கும் ஆதார் அட்டைகள் வழங்கப்படவில்லை. அட்டைகள் வழங்குவது குறித்து மத்திய அமைச்சர்கள் அளவில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆதார் அட்டைகள் வழங்கப்படவில்லையென்றாலும், ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம். மேலும் அக்டோபர் மாதத்துக்குள் அனைவருக்கும் ஆதார் எண்கள் வழங்கும் பணிகள் முடிக்கப்படும்.20 லட்சம் அட்டைகள்: இப்போது ஆதார் எண், புகைப்படத்துடன்கூடிய அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அட்டைகள் ஆதார் அட்டை இல்லை. ஆனால் அதில் உள்ள எண்ணில் மாற்றம் இருக்காது. இந்த அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கு பயோ-மெட்ரிக் தகவல்கள் அடங்கிய சிப்-வுடன்கூடிய அட்டை வழங்கப்படும். அதுவே உண்மையான ஆதார் அட்டை.தமிழகத்தில் கடலோரத்தில் வசிக்கும் 20 லட்சம் பேருக்கு சோதனை முறையில் சிப்-வுடன்கூடிய ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் குறைபாடுகள் இருந்தால் மேம்படுத்தி அட்டைகள் வழங்கப்படும்.
                                          ஒவ்வொரு தாலுகாவிலும் தனிப்பிரிவு: ஆதார் அட்டைகள் வழங்கும் முகாம்களில் பங்கு பெறாதவர்களுக்கு அட்டைகள் வழங்குவதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தனிப்பிரிவு தொடங்கப்படும்.இந்த தனிப்பிரிவுகளை அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தனிப்பிரிவு நிரந்தரமாகச் செயல்படும். இங்கு புதிய ஆதார் அட்டைகளுக்கு விண்ணப்பங்கள் தரப்படுவதுடன் பயோ மெட்ரிக் பதிவுகளும் செய்யப்படும். சென்னை மாநகராட்சியில் அந்தந்த மண்டல அலுவலகங்களில் தனிப்பிரிவு தொடங்கப்படும்.மேலும் முகவரி மாறுபவர்கள், திருத்தம் செய்பவர்கள் இந்த தனிப்பிரிவுகளில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.ஆதார் அட்டைக்காக பயோ மெட்ரிக் தகவல்கள் சேகரிக்கும் முகாம்கள் எங்கு நடைபெறுகின்றன என்பது குறித்த விவரங்களுக்கு 044- 2491 2993 என்ற எண்ணில் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். தமிழகத்தில் இதுவரையில் சுமார் 2.98 கோடி பேரிடம் பயோ-மெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதில் சுமார் 2.71 கோடி பேரின் தகவல்கள் மட்டும் யு..டி...-யிடம் கொடுக்கப்பட்டுள்ளன.மே 3-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் சுமார் 1.93 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் 3.93 லட்சம் பேரிடம் மட்டுமே பயோ-மெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.ஆதார் எண் முடிவு செய்யப்பட்டவுடன் எஸ்.எம்.எஸ். மூலம் அந்த எண் தெரிவிக்கப்படும். அல்லது அஞ்சல் மூலம் எண் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் இப்போது கோடம்பாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் மட்டும் பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் பகுதிகளில் இன்னும் 2 வாரத்தில் தகவல் சேகரிக்கும் பணிகள் முடிக்கப்படும்.அண்ணாநகர் மண்டலத்தில் அடுத்த வாரம் பணிகள் தொடங்கும். மீதமுள்ள மண்டலங்களில் இந்த மாத இறுதிக்குள் பணிகள் தொடங்கும். பயோ மெட்ரிக் தகவல்கள் சேகரிக்கும் முகாம்கள் எங்கு எப்போது நடைபெறும் என்பது குறித்து தெரிந்து கொள்ள 044 2491 2993 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.    
                                சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள உதவி வருவாய் அதிகாரிகள் இந்தப் பணிகளை கண்காணிக்கின்றனர்.வரும் 2014-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் துறையின் ரேஷன் அட்டைகள், ஆதார் அட்டையில் உள்ள பயோ மெட்ரிக் தகவல்கள் மூலம் தயாரித்து வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. இப்போது 5 வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு பயோ-மெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. ஒரு குடும்பத்தில் 5 பேரில் 4 பேர், 5 வயதுக்கு மேல் இருந்தால் அவர்களுடைய பயோ-மெட்ரிக் தகவல்களை ரேஷன் அட்டைகளில் இடம்பெற செய்ய ஆலோசனை நடக்கிறது. இதற்காக தமிழக அரசு மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்யும் என்று தெரிகிறது. சமையல் கேஸ் சிலிண்டர் மானியம்: இதேபோல அக்டோபர் 1-ஆம் தேதிக்கு பிறகு சமையல் கேஸ் சிலிண்டருக்கான நேரடி மானியம் ஆதார் அட்டை எண் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல கோடி பேரிடம் பயோ-மெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்படாத நிலையில் இந்த புதிய முறை பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment