Wednesday 15 May 2013

ஆசிரியர் தகுதித் தேர்வை அறிவிக்க தயங்கும் டி.ஆர்.பி - கையை பிசையும் பயிற்சி மையங்கள்



                ஆசிரியர் தகுதி தேர்வு நடக்கும் தேதியை அறிவிக்காமல், ஆசிரியர் தேர்வு வாரியம், காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், ஜூனுக்குள் பயிற்சியை முடித்து விடலாம் என, கணக்குப் போட்டிருந்த பயிற்சி மையங்கள்
தற்போது கையை பிசைந்து வருகின்றன. கடந்த ஆண்டு, ஜூலை, 12ம் தேதி, முதல் முறையாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில், 6.72 லட்சம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதியதில், 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். காலியிடங்களை விட மிகக் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றதால், டி.ஆர்.பி., உடனடியாக மறு தேர்வு ஒன்றை அறிவித்தது. அக்., 14ம் தேதி நடந்த மறு தேர்வில், 19,246 பேர் தேர்ச்சி பெற்றனர். தகுதி மதிப்பெண் என நிர்ணயம் செய்யப்பட்ட 60 சதவீதம் (150க்கு 90 மதிப்பெண்) மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் பணி வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டு வரை, பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் நடைபெற்று வந்தது.
                             
இதனால், ஆசிரியர் பயிற்சி முடித்த பலரும் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் உடனடியாக பணி வாய்ப்பு கிடைத்ததால், தகுதித் தேர்வுக்கு பலத்த மவுசு ஏற்பட்டது. இதையடுத்து, ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு டி..டி., பயிற்சி மையங்கள் தோன்றின. இரண்டு முறை கோட்டை விட்டவர்கள், அடுத்த தகுதித் தேர்வு எதிர்பார்த்து, இந்த மையங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர். மூன்றாவது தகுதித் தேர்வு, வரும் ஜூன் மாதம் நடக்கும் என, செய்திகள் வெளி வந்தபடி இருந்தது. ஆனால், இதுகுறித்த அறிவிப்பை வெளியிடாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் தொடர்ந்து தயக்கம் காட்டிவருகிறது.
                              
கடந்த ஜனவரி முதல் ஐந்து மாதங்களாக பயிற்சி அளித்து வரும் மையங்கள், ஜூன் மாதம் தேர்வு நடக்கும் என்ற நம்பிக்கையில், கட்டணம் நிர்ணயித்து, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தி வருகின்றன. தேர்வு வரை வகுப்புகள் நடத்தப்படும் என, துவக்கத்தில் அறிவிப்பு செய்திருந்தன. ஆனால், தற்போது எப்போது தேர்வு நடக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. கடந்த, 10ம் தேதி சட்டசபையில் நடந்த பள்ளி மானிய கோரிக்கையின் போது, தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அறிவிக்கப்படவில்லை. மேலும், பயிற்சிக்கு வருபவர்களும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள்தான். பலர் சொந்த தொழிலும், தனியார் நிறுவன பணியாளர்களாகவும் உள்ளனர். மூன்று அல்லது நான்கு மாத பயிற்சிக்குப் பின், அரசு ஆசிரியராக பணியில் சேர்ந்து விடலாம் என எண்ணி, வழக்கமான பணியை ஒதுக்கி வைத்து பயிற்சி பெற்று வந்தனர். இனியும், வேலைக்கு செல்லாமல், பயிற்சிக்கு சென்றால் கடும் பணத் தட்டுப்பாட்டை எதிர் கொள்ள நேரிடும் என்பதால், தங்களின் வழக்கமான பணிகளுக்கு திரும்பி வருகின்றனர்
.

No comments:

Post a Comment