Sunday 19 May 2013

"கருத்துக் கேட்பு கூட்டமாக" மாறிய கவுன்சிலிங், ஆசிரியர்கள் ஏமாற்றம் - நாளிதழ் செய்தி



             பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வுக் கூட்டம், கருத்துக் கேட்புக் கூட்டமாக மாற்றப்பட்டதால், பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கடந்த
ஆண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் மாற்றியமைக்கப்பட்டன. இதன்படி, உபரியாக இருந்த ஆசிரியர்கள், பணிநிரவல் மூலமாக காலியிடம் இருக்கும் பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்யப்பட்டனர். மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை, கணிதம், தமிழ், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவலில் மிகவும் பாதிக்கப்பட்டனர். அதாவது, ஏற்கெனவே பணியாற்றிய பள்ளிகளில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் பள்ளிகளுக்கு பணிநிரவல் காரணமாக மாறுதல் செய்யப்பட்டனர்.
                              
இந்த ஆண்டுக்கான கலந்தாய்வில், பணிநிரவலில் இடமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பணிநிரவல் மூலம் மாறுதல் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பணிநிரவலில் சென்ற பட்டதாரி ஆசிரியர்கள் இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் கூடினர். கோடை விடுமுறை என்பதால், வெளியூர் சென்றிருந்த ஆசிரியர்களும் கலந்தாய்வில் பங்கேற்க வந்திருந்தனர். ஆனால், அங்கு கலந்தாய்வு நடத்தப்படவில்லை. மாறாக, பணிநிரவலில் சென்ற ஆசிரியர்களின் விவரங்கள் பெறப்பட்டன. பணிநிரவலுக்கு முன்பு பணியாற்றிய பள்ளி, பணிநிரவலில் மாறுதல் பெற்ற பள்ளி, அப் பள்ளியில் பணியில் சேர்ந்த நாள் உள்ளிட்ட விவரங்களை, கல்வித் துறை அதிகாரிகள் படிவங்களில் பூர்த்தி செய்து பெற்றுக் கொண்டனர்.
                           
இடமாறுதல் கலந்தாய்வு எனக் கூறிவிட்டு, கருத்துக் கேட்பு கூட்டமாக நடத்தப்பட்டதால், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இது குறித்து, முன்கூட்டியே அறிவித்திருக்கலாமே என்றும், சில ஆசிரியர்கள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். இது குறித்து, கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, பணிநிரவலில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நல்ல வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே, அவர்களுக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களில் இருந்து உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு முதலில் நடத்தப்பட உள்ளது. இதில், மதுரை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் 26 பேர் தகுதி உடையவர்களாக இருக்கின்றனர். இவர்கள் பதவி உயர்வில் செல்லும்பட்சத்தில், அங்கு காலியிடம் ஏற்படும். அதன் பிறகு கலந்தாய்வு நடத்தினால், பணிநிரவலில் மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் அதிகம் பயன்பெறுவர். எனவே, கலந்தாய்வுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதால், ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் கிடையாது என்றனர்
.

No comments:

Post a Comment