Wednesday 1 May 2013

புதிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் துவங்குவதற்கு தமிழக அரசு தடை



             தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, தமிழகத்தில், வரும் கல்வி ஆண்டில், புதிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் துவங்க அனுமதி கிடையாது என, ஆசிரியர் கல்விக்கான தேசிய குழு அறிவித்துள்ளது. ஆசிரியர் பயிற்சி
படிப்பிற்கு, போதிய அளவிற்கு வேலை வாய்ப்பு இல்லாத நிலையை கருத்தில்கொண்டு, தமிழக அரசு, இந்த முடிவை எடுத்துள்ளது. தமிழகத்தில், ஏற்கனவே தேவைக்கும் அதிகமான எண்ணிக்கையில், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருவதையும், குறிப்பாக, இரண்டு ஆண்டு பட்டயப் படிப்பை வழங்கும் ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களுக்கு, மாணவர் மத்தியில், போதிய வரவேற்பு இல்லாத நிலையையும், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலிடம், தமிழக அரசு சுட்டிக் காட்டியது.இதனால், "வரும் கல்வி ஆண்டில் (2013-14), புதிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டாம்' என, தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், வரும் கல்வி ஆண்டில், தமிழகத்தில், புதிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள் துவங்க, அனுமதி கிடையாது என, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (என்.சி.டி..,) அறிவித்துள்ளது. அதே நேரத்தில், புதிதாக, பி.எட்., கல்லூரிகள் துவங்க, எவ்வித தடையும் இல்லை. எட்டு ஆண்டுகளுக்கு முன் வரை, ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சிக்கு, நல்ல வரவேற்பு இருந்தது. அப்போது, அரசுப் பள்ளிகளில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான வகுப்புகளில், ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு படித்தவர்கள், நியமனம் செய்யப்பட்டனர். அதன்பின், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே, நியமனம் செய்யப்படுகின்றனர். ஆறாம் வகுப்பில் இருந்து, பி.எட்., படித்தவர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.இதனால், ஆசிரியர் கல்வி பயிற்சி பெற்றவர்களுக்கு, வேலை வாய்ப்பு, 90 சதவீதம் அளவிற்கு குறைந்துவிட்டது. இதனால், இந்த பயிற்சியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. ஏற்கனவே இந்த பயிற்சியை முடித்துவிட்டு, 1.5 லட்சம் பேர், ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.எட்டு ஆண்டுகளுக்கு முன், 750 ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் இருந்தன. தற்போது, 500ஆக குறைந்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும், 50 முதல், 100 கல்வி நிறுவனங்கள் வரை மூடப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் இருந்தபோதும், வெறும், 8,000 இடங்கள் மட்டுமே நிரம்பின என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற காரணங்களினால், புதிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் துவங்க, தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகம் மட்டுமில்லாமல், ஆந்திரா, சட்டீஸ்கர், கோவா, இமாச்சல பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய, ஏழு மாநிலங்களிலும், பல்வேறு புதிய கல்வி நிறுவனங்கள் துவங்க, என்.சி.டி.., அனுமதி மறுத்துள்ளது. அந்தந்த மாநிலங்களின் கோரிக்கை அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய கவுன்சில் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment