Tuesday 21 May 2013

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு கோவையில் மையம் அமையுமா?



            சென்னைக்கு அடுத்தபடியாக அதிக கல்லூரிகள், மாணவர்கள், பிற மாநில மாணவர்கள் அதிகம் உள்ள மாவட்டமாக உள்ள கோவையை, சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான மையமாக அறிவிக்க வேண்டும் என்ற
கோரிக்கை வலுத்து வருகிறது. மத்திய அரசு பணிகள் தேர்வாணையத்தின் மூலம் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதல்கட்ட தேர்வுகள் நாடு முழுவதும் 30 நகரங்களில் நடக்கிறது. தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் மட்டுமே இதற்கான தேர்வு மையங்கள் உள்ளன. கோவை மாவட்டத்தையும் மையமாக அறிவிக்கும் பட்சத்தில், தமிழகம் மட்டுமின்றி, பக்கத்து மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களும் பயனடைவர். இந்த தேர்வுகளில் பங்கேற்க, ஈரோடு, ஊட்டி, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
                         மேற்கு தமிழகம் மட்டும் இன்றி கேரளாவில் பாலக்காடு, மலம்புழா, வயநாடு உள்ளிட்ட பகுதி மாணவர்களும், கர்நாடகாவில் தெற்கு மாவட்ட பகுதி மாணவர்களும் கோவையை மையமாக அமைப்பதால் பயன் பெறுவார்கள். இது குறித்து மாநகராட்சி இலவச உயர்கல்வி மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் கூறியதாவது: நடப்பு ஆண்டிற்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுகள் வரும் 26ம் தேதி நடக்கிறது. கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மட்டும், 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்க உள்ளனர். அனைத்து மாவட்டத்திற்கும் மையமாக உள்ளதால், பிற இடங்களைவிட, கோவையை தேர்வு மையமாக அறிவித்தால் வசதியாக இருக்கும். இதனால், ஆயிரக்கணக்கான மாணவர்களின் பொருள், நேரம், பணம் விரயமாகாமல் தவிர்க்கலாம். உதாரணமாக, கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மாணவர்கள் 325 கி.மீ., பயணித்து கொச்சினுக்கு செல்வதை காட்டிலும், 200 கி.மீ., தொலைவில் உள்ள கோவைக்கு வருவது எளிது.
                          சென்னைக்கு அடுத்தபடியாக கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் அதிகம் உள்ள கோவை மாவட்டம். அதை சுற்றிலும் உள்ள பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இத்தேர்வில் ஒவ்வொரு வருடமும் பங்கேற்கின்றனர். இதனால் கோவை மாவட்டத்தை தேர்வு மையமாக அமைப்பதில் எவ்வித சிக்கலும் இருக்காது. இவ்வாறு, அவர் கூறினார். பயிற்சி மாணவர்கள் வசந்தகுமார், சந்தோஷ், நிஷா ஆகியோர் கூறுகையில், "தேசிய, மாநில வேலைவாய்ப்பு மற்றும் பிற தேர்வுகளுக்கு கோவையை மையமாக வைத்து நடத்தும்போது, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு மட்டும் மையமாக அறிவிக்காதது ஏன்? கோவை மாவட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களின் சந்திப்புகள் உள்ளது. அவ்வாறு கோவை மாவட்டத்தை சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு மையமாக அறிவித்தால் பல மாவட்ட மாணவர்கள் பயனடைவார்கள்," என்றனர். கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இரண்டு உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒரு பள்ளியை தேர்வு மையமாக அறிவிப்பதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்று பலதரப்பினர் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment