Sunday 19 May 2013

பள்ளிக்கல்வித்துறை திடீர் நிபந்தனைக்கு பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு



             உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களாகவும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற முடியும். இதனடிப்படையில் முதுகலை
ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவரின் பெயர், மீண்டும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனியாரிட்டி பட்டியலிலும் இடம் பெறும். தற்போது 2013 ஜனவரி 1 நிலவரப்படி முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெறும் பட்டதாரி ஆசிரியர்களின் சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்களிடம் முதுகலை ஆசிரியராக விருப்பமா அல்லது உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக விருப்பமா என கடிதம் பெற பள்ளி கல்வித்துறை திடீர் நிபந்தனை விதித்துள்ளது. மேலும் பட்டதாரி ஆசிரியர்களின் விருப்பத்தை பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் சீனியாரிட்டி பட்டியலில் இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்களிடம் விருப்ப கடிதம் கேட்டு நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர். ஆனால் இதற்கு பட்டதாரி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து பட்டதாரி ஆசிரியர் கழக செயலாளர் கோவிந்தராஜு, உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் சேதுச்செல்வம் ஆகியோர் கூறுகையில், 'முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் சென்ற பட்டதாரி ஆசிரியர், விருப்பத்தின் அடிப்படையில் மீண்டும் உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியராக பதவி உயர்வு பெற முடியும். கல்வித்துறையின் புது நிபந்தனையால் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியாது. இது எங்களின் உரிமையை பறிக்கும் செயலாகும். எனவே இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்' என்றனர்.

No comments:

Post a Comment