Thursday 27 June 2013

ரயிலில் இடமில்லை... பொறியியல் கலந்தாய்வு செல்லும் மாணவர்கள் தவிப்பு


                         நாமக்கல் பகுதிகளில் இருந்து, சென்னைக்கு, பொறியியல் மற்றும் மருத்துவ கலந்தாய்வுக்கு செல்லும் மாணவர்கள், பேருந்து மற்றும் ரயிலில் இடம் கிடைக்காமல், அவதிப்படுகின்றனர். எனவே, சேலம் வழியாக, சென்னைக்கு,
சிறப்பு ரயில் இயக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையில், இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த, ஏராளமான மாணவ, மாணவியர், தினமும், சென்னைக்கு செல்கின்றனர். வடமாவட்டங்களில் இருந்து, சென்னை செல்லும் பெரும்பாலான பேருந்துகள், நிரம்பி வழியும் நிலையில், சேலம் வழியாக, சென்னை செல்லும் முக்கிய ரயில்களிலும், கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது.                                     

                                  "கலந்தாய்வு செல்லும் மாணவர்களின், சிரமத்தை தவிர்க்கும் வகையில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரயில்களை தாமதம் இல்லாமல் இயக்கவும், சேலம்- விருத்தாசலம் வழித்தடத்தில் கூடுதலாக, சென்னைக்கு ரயில் இயக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  "சென்னை - மதுரை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலை, வார நாட்களில் இயக்கவும், வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும், சென்னை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலை, திங்கள், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களிலும், ஈரோட்டை சுற்றிச் செல்லும் ரயில்களை, நாமக்கல், கரூர் வழியாக இயக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மாத இறுதி வரை, சென்னையில் நடக்கும் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வசதியாக, சேலம்- கரூர், சேலம்- விருத்தாசலம் ஆகிய வழித்தடங்களில், சிறப்பு ரயில்களை இயக்க, ரயில்வே நிர்வாகம் முன் வர வேண்டும்.

No comments:

Post a Comment