Thursday 29 August 2013

"பொது தேர்வு நடைமுறையில் மாற்றம் கிடையாது': செயலர் சபிதா திட்டவட்டம்



                         "தற்போதுள்ள, பொதுத்தேர்வு நடைமுறையில், எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது,'' என, பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், சபிதா, திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச்,
முதல் வாரத்தில் துவங்கி, கடைசி வாரத்தில் முடியும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், கடைசி வாரத்தில் துவங்கி, ஏப்ரல், முதல் வாரத்தில் முடியும். இதன்படி தான், பல ஆண்டுகளாக, தேர்வுகள் நடந்து வருகின்றன. இரு தேர்வுகளுமே, தனித்தனியாகத் தான் நடக்கின்றன. அப்படியிருக்கும் போதே, பல குளறுபடிகள் நடந்து வருகின்றன. கடந்த பொதுத்தேர்வில் கூட, 10ம் வகுப்பு தேர்வில், பல குளறுபடிகள் நடந்தன. இது போன்ற நிலையில், "பிளஸ் 2 தேர்வுகளுக்கு இடையே வரும் விடுமுறை நாட்களில், 10ம் வகுப்பு தேர்வை நடத்தலாம்' என, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் சிலர், தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜனிடம் தெரிவித்துள்ளனர். இதனால், "வரும் பொதுத்தேர்வு, ஒன்றாக நடத்தப்படலாம்' என, தகவல்கள் வெளியாயின.
                               
இது குறித்து, பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், சபிதா கூறியதாவது: தலைமை ஆசிரியர்கள் சிலர், தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை, இயக்குனரிடம் கூறியுள்ளனர்; அவ்வளவு தான். தற்போதைய தேர்வு நடைமுறையில், எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது. அது போன்ற எண்ணமும், துறைக்கு இல்லை. மாணவர்கள், தேவையில்லாமல் குழப்பம் அடைய வேண்டாம். பொதுவாக, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாது. இவ்வாறு, சபிதா தெரிவித்தார். தேவராஜன் கூறுகையில், ""10ம் வகுப்பு தேர்வை, ஒரு மாதம் முன்கூட்டியே நடத்துவது குறித்து, தேர்வுத் துறை, எவ்வித முடிவையும் எடுக்கவில்லை. வழக்கம் போல் தான், இந்த ஆண்டும் தேர்வு நடக்கும்,'' என்றார். இரண்டு தேர்வுகளையும், ஒன்றாக நடத்தினால், பெரும் குழப்பங்களும், குளறுபடிகளும் ஏற்படுவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒரு தேர்வு மையத்தில், பிளஸ் 2 கேள்வித்தாள்களும், 10ம் வகுப்பு கேள்வித்தாள்களும் இருந்தால், தேர்வின் போது, கேள்வித்தாள்களை, மாற்றி வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும், நடைமுறை ரீதியாக, பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்றும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
.

No comments:

Post a Comment