Sunday 22 September 2013

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் அகில இந்திய ஆசிரியர் சங்க செயலாளர் பேட்டி


                     தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்று திண்டுக்கல்லில் அகில இந்திய ஆசிரியர் சங்கங்களின் செயலாளர் அண்ணாமலை கூறினார். அகில இந்திய ஆசிரியர் சங்கங்களின் செயலாளர் அண்ணாமலை திண்டுக்கல்லில்
நிருபர்களிடம் கூறியதாவது: பழைய ஓய்வூதிய திட்டம் மத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கும், தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் ரூ.10 ஆயிரம் சம்பள வித்தியாசம் உள்ளது. அனைத்து ஆசிரியர்களுக்கும் சமமாக வழங்க வேண்டும். தேர்தல் நேரத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால், இதுவரை அமல்படுத்த வில்லை. 2¼ லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலன்கருதி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து மாநிலங்களிலும் ஆசிரியர் தகுதி தேர்வில் இனவாரியாக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி மதிப்பெண்

             ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் பொதுப்பிரிவினர் 60 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 50 சதவீதமும், தாழ்த்தப்பட்டோர் 40 சதவீதமும் தகுதித் தேர்வில் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று உள்ளது. ஆனால், தமிழகத்தில் அனைவரும் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்று உள்ளது. எனவே, தேர்ச்சி மதிப்பெண் அளவை குறைத்து, இனவாரி ஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும் தொடக்கப் பள்ளிகளில் தாய்மொழி தமிழை விடுத்து ஆங்கில வழிக்கல்வியை புகுத்துகிறார்கள். தமிழிலேயே கல்வி கற்பிக்க வேண்டும். வருகிற அக்டோபர் மாதம் 21-ந் தேதி டெல்லியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தர்ணா போராட்டம் நடக்கிறது. இதில் 28 மாநிலங்களை சேர்ந்த ஆசிரியர்களும் பங்கேற்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment