Sunday 29 September 2013

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்படாது: மத்திய அரசு திட்டவட்ட முடிவு


         மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெறும் வயதை, 62ஆக உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை, என்று, மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர், நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது, தற்போது, 60 ஆக உள்ளது. மத்திய
அரசின் பல்வேறு துறைகளில், மொத்தம், 50லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். மத்திய அரசுக்கு நிதி பற்றாக்குறை உள்ள நிலையில், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு,ஓய்வு கால பலன், பணிக்கொடை ஆகியவற்றை மொத்தமாக வழங்க முடியாத நிலை உள்ளதால், மத்திய பணியாளர் அமைச்சகம், மத்திய அரசு ஊழியர்களின் வயதை, 62 ஆக உயர்த்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் கிளம்பின.லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, மத்திய அரசு பல அறிவிப்புகள் வெளியிடுவதால், அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

                    இதனால், ஓய்வுபெறும் நிலையில் உள்ள ஊழியர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இது குறித்து, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர், நாராயணசாமியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளிக்கையில், ""இப்போது வரையில்,மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து, அரசுக்கு எவ்வித எண்ணமும் இல்லை. இதை திட்டவட்டமாக தெரிவித்து விடுகிறேன்,'' என்றார். மத்திய அரசு ஊழியர்களின், ஓய்வுபெறும் வயது முன்பு, 58 வரை இருந்ததை, 1998ல் 60 ஆக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் ஓய்வுபெறும் வயது, 62 ஆக உள்ளது.

No comments:

Post a Comment